கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கான வரவேற்பு மிகக் குறைவாக உள்ளது. அதற்கேற்றார்போல ரசிகர்களை கவரும் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ திரைப்படம் வெளியாகி எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்த படத்தை விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து விஜய் ஆண்டனி “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் ப்ளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவி ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிவிடாதீர்கள்” எனக் கூறியிருந்தார். இது சலசலப்பை உண்டாக்கியது.