சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்கா? பிரேம்ஜி கல்யாண குழப்பத்திற்கு வெங்கட்பிரபு விளக்கம்..!

Mahendran

புதன், 5 ஜூன் 2024 (12:37 IST)
வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி திருமணம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் ஜூன் 9ஆம் தேதி இந்து என்பவரை அவர் திருமணம் செய்ய உள்ளார் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் மணப்பெண் குறித்த சர்ச்சையான தகவல் இணையத்தில் பரவி வரும் நிலையில் இது குறித்து வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!
 
எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?" "சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகின்றோம்!
 
இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. 
 
திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்!
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்