ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்திற்கு, 'ஏ' சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து, 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக்கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'கூலி' திரைப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியதால், 18 வயதுக்குட்பட்டவர்கள் படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'கேஜிஎஃப்' போன்ற திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தபோதிலும், அதற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, 'கூலி' படத்திற்கு வழங்கப்பட்ட 'ஏ' சான்றிதழை ரத்து செய்து, 'யு/ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி டி. தமிழ்ச்செல்வி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் உள்ள சில வன்முறை காட்சிகளை நீக்கினால், 'யு/ஏ' சான்றிதழ் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.