கமர்ஷியல் படத்தில் இப்படி ஒரு கவிதை… குஷி ரி ரிலீஸை ஒட்டி வைரமுத்து சிலாகிப்பு!

vinoth

சனி, 27 செப்டம்பர் 2025 (08:16 IST)
விஜய், ஜோதிகா, விவேக், விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த ‘குஷி’ திரைப்படம். விஜய்க்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்த இந்த படம் 25 ஆண்டுகள் கழித்து நேற்று முன்தினம் ரி ரிலீஸானது. சமீபகாலமாக விஜய்யின் ரி ரிலீஸ் படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் குஷியும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் எல்லா பாடல்களையும் எழுதிய வைரமுத்து தன்னுடைய மலரும் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். அதில் “ குஷி படத்தின் மறு வெளியீடு பாடல்களை மீண்டும் ஆசை ஆசையாய்  அசைபோட வைக்கிறது. பாடல்கள் வசப்படாத படம் மறுவெளியீட்டுக்கு வசதிப்படாது. கால் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தின் பால்ய வயது மற்றும் பதின்ம வயதுக்காரர்களின் நினைவுத் தடத்தில் இன்னும் கும்மி  கொட்டிக்கொண்டே இருக்கின்றன குஷி பாடல்கள்.


ஆர்மோனியக் கட்டைகளையும் மக்களின் நரம்புகளையும் ஒருசேரத்  தொடத் தெரிந்தவர் தேவா. என் நெஞ்சிலிருந்த காதல் தானே எழுந்துகொண்டதா? நீ எழுப்பினாயா? என்பது பாடலின் உள்ளடக்கம். கதைவழி இதை ஒரு கவிதை செய்ய முயன்றேன். "மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும். முட்டும் தென்றல் தொட்டுத் தொட்டுத் திறக்கும். அது மலரின் தோல்வியா? இல்லை காற்றின் வெற்றியா? கல்லுக்குள்ளே சிற்பம்  தூங்கிக் கிடக்கும் சின்ன உளி  தட்டித் தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா? இல்லை உளியின் வெற்றியா?"

'கமர்ஷியல்' பாட்டில் இப்படி ஒரு கவிதை.  தீபாவளி வாரத்தில் ரங்கநாதன் தெருவில் புல்லாங்குழல் வாசித்தமாதிரி அபாய முயற்சி . எஸ்.ஜே.சூர்யாவின் கலைத் துணிச்சல் அபாரமானது. விறுவிறு விஜய், துறுதுறு ஜோதிகா. இருவரும் பரபர செய்துவிட்டார்கள் பாடலை. திரைக்கதை நுண்மைகளால் எப்போதும் இளமையாய் இருக்கும் இந்தப் படம் பாடலைக் கேட்டு என் நாற்பதுகளுக்கு நகர்கிறேன் நானும். இப்படி இனிமேல் படங்கள் வருமா? பாடல்கள் வருமா? வரவேண்டும்..” என முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்