“சத்யஜித்ரே படம் போல இருக்கிறது” - ‘ஒரு குப்பைக் கதை’க்கு வைகோ பாராட்டு

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (19:13 IST)
‘சத்யஜித்ரே படம் போல இருக்கிறது’ என ‘ஒரு குப்பைக் கதை’ படத்தைப் பாராட்டியுள்ளார் வைகோ.
 
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் ‘ஒரு குப்பைக் கதை’. மனிஷா யாதவ், சுஜோ மேத்யூ இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை, அஸ்லம் தயாரித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, “பெண்கள் அனைவரும் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஒரு குப்பை​க்​ கதை' படத்தை​ப்​ பார்க்க வேண்டும். இன்றைக்கு மணமுறிவுகள் ஏற்படுவது, கள்ளக்காதலில் மனைவி படுகொலை, கணவன் தலையில் மனைவி அம்மிக்குழவியை போட்டு​க்​ கொன்றாள், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை படுகொலை செய்வது என அன்றாடம் இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். என் நெஞ்சே கொதிக்கின்றது. 50 ஆண்டுகளுக்கு முன் இதுபோல் கிடையாது. அறம் வளர்த்த நாடு நம்முடையது.இந்த சமூகத்தில் வெளிவராத அந்தரங்க ஆபத்துக்கள் எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை அருவெறுப்பு ஏற்படாமல், ஆபாசமில்லாமல் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய படிப்பினையை​ச்​ சொல்லியிருக்கிறார்கள். நம் சமூகத்தில், குடும்ப வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரை அணுகவிட வேண்டும்​, அணுகவிட​க்​ கூடாது என்பதையும், கணவன் எவ்வளவு வசதியானவனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல சுற்றுப்புறச்சூழல் இல்லாவிட்டால் எவ்வளவு கஷ்டம் என்பதையும்அருமையாக காட்டியிருக்கிறார்கள்.
 
இந்த திரைப்படத்தை பார்த்ததும், இன்றைய சமூகத்தின் அவலங்களுக்கு மத்தியிலே வாழும் மக்கள் இந்தப் படத்தை கட்டாயம் பார்க்கவேண்டும் என நினைத்தேன். அந்த அளவுக்கு இதில் ஒரு மெசேஜ் இருக்கிறது. சமூகம் இருக்கும் இன்றைய சூழலில் இவ்வளவு நல்ல திரைப்படத்தை ​இயக்கு​ந​ர் காளி ரங்கசாமி எடுத்துள்ளார். இதில் நடித்தவர்களும் உண்மையிலேயே நடித்தது போலவே இல்லை, வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
 
இதில் காட்டப்பட்டுள்ள பகுதியை​ப்​ பார்க்க என்னடா இப்படி இருக்கிறதே என சற்று அருவறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் வாழ்க்கை. இன்னொரு உலகம் இருக்கிறது. அது ஏழு நட்சத்திர ஹோட்டல் உலகம். அந்த உலகம் வேறு. அந்த உலகத்தை​ப்​ பார்க்கிறோம். அந்த கட்டடங்களை​ப்​ பார்க்கிறோம். அந்த மக்களை​ப்​ பார்க்கிறோம். ஆனால், நரகத்தை​ப்​ போல் ஆக்கப்பட்டுவிட்ட இந்த குப்பையிலும் சாக்கடையில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை இருக்கிறதே... இது உண்மை.பிரபல இயக்குனர் சத்யஜித்ரே தனது படங்களில் இதுபோன்ற விஷயங்களை காட்டித்தான் பல விருதுகளை வாங்கினார்.
 
இந்தப்படத்தில் அரைகுறை ஆடைகள் கிடையாது. ஆபாசமான காட்சிகள் கிடையாது. இயற்கையான வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாக படமாக எடுத்துள்ளார்கள். இந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைக்குமா என்பதைவிட, மக்கள் இந்தப் படத்தை பார்த்து படம் எடுத்தவர்களுக்கு கடன் இல்லாமல் செய்ய, தங்களது கடனை செய்யவேண்டும்..இந்த சமூகத்தில் வசதி படைத்த இளைஞர்கள், எப்படி வேண்டுமானாலும் யாருடைய வாழ்க்கையையும் எளிதாக சீரழிக்கலாம் என அவர்கள் மனது கெட்டு வளர்த்துக்கொண்டுஇருக்கிறது. அந்த மாதிரி அவர்கள் மாறிக்கொண்டு இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. அவர்கள் மாறவேண்டும். இந்தப் படத்தை பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக படம் எடுக்கும் இந்த காலத்தில், லட்சியத்திற்காக படம் எடுக்கும் காளி ரங்கசாமி போன்ற​ இயக்கு​ந​ர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்