இந்திய அளவில் திரைப்படங்களுக்கு மத்திய அரசால் அளிக்கப்படும் உயரிய விருதாக தேசிய விருதுகள் உள்ளன. முன்பெல்லாம் வணிக ரீதியாக இல்லாமல் கலை ரீதியாக உருவாக்கப்படும் படங்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டன. அத்தகையப் படங்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருதுகள் இருந்தன. ஆனால் இப்போது அந்த விருதுகளிலும் வணிக ரீதியாக உருவாக்கப்படும் படங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.
இந்த ஆண்டு அயோத்தி, ஆடு ஜீவிதம் போன்ற படங்களுக்கு எந்த விருதுகளும் அளிக்கப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சிறந்த குணச்சித்திர நடிகைக்காக உள்ளொழுக்கு படத்துக்காக விருது பெற்றுள்ள ஊர்வசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது சம்மந்தமாக பேசியுள்ள அவர் “மலையாள சினிமாக்கள் தேசிய விருதுகள் குழுவால் புறக்கணிக்கப்படுகிறதா என்று தேசிய விருதுகள் பரிசீலனைக் குழு பதிலளிக்கவேண்டும். ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. அதே போல ஆடு ஜீவிதம் படத்துக்கு எந்த பாராட்டும் கிடைக்கவில்லை.” என தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.