பேரன்பு படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்த திருநங்கை அஞ்சலி அமீர் தனது காதலர் மேல் புகார் கூறியுள்ளார்.
பேரன்பு படத்தில் நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்தவர் திருநங்கை அஞ்சலி அமீர். அவரது நடிப்பு பலராலும் பாரட்டப்பட்ட நிலையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இப்போது மலையாளத்தில் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் அஞ்சலி அமீர் நேற்று பேஸ்புக்கில் லைவ்வில் வந்த அவர் ’எனது காதலர் அனஸ், என் உணர்வுகளை மதிப்பதில்லை. என் நண்பர்களிடம் பேச கூட என்னை அனுமதிப்பதில்லை. அவரைப் பிரியும் முடிவை எடுத்தால் ஆசிட் ஊற்றிக் கொல்வேன் என்று மிரட்டுகிறார்’ என அழுதுகொண்டேக் கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அவரது காதலர் அனஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘நான் அவரை என்றும் மிரட்டியதில்லை. கடந்த 2 வருடமாக நாங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அவருக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை என்பதால் நான் உதவியாகத்தான் இருந்தேன். ஆனால், அவர் நண்பர்கள் அவருக்குத் தவறான ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். அஞ்சலிக்கு விருப்பமில்லை என்றால் விலகிக்கொள்ளட்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.