நடிகர் சூர்யா வரிக்கான வட்டியை ரத்து செய்யவேண்டுமென நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்த ஹேஸ்டேக் இன்று டிரெண்டிங் ஆகி வருகிறது.
2010ஆம் ஆண்டு அக்டோபரில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்குப் பிறகு, 2007 - 2008, 2008- 20099ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியை செலுத்த வேண்டுமென 2013ல் வருமான வரித் துறை கூறியது. இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் கூறியது.
இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. ஆனால், வருமான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டுமென தீர்ப்பாயத்திலும் கூறப்பட்டது. இதையடுத்து, தனக்கான வருமான வரி மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் மதிப்பீடு செய்யப்பட்டதால், தான் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு ஒரு சதவீதம் வட்டி விதிக்கப்பட்டிருப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென கடந்த 2018ஆம் ஆண்டில் சூர்யா வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தான் ஒழுங்காக வரி செலுத்திவருவதாகவும் கணக்கிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு வருமான வரித்துறையே காரணம் என்பதால், வட்டித் தொகையைச் செலுத்துவதிலிருந்து தனக்கு விலக்களிக்க வேண்டும் எனவும் சூர்யா கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய சூர்யாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தும் அவர் அவ்வாறு செய்யவில்லை.
ஆகவே இதற்காக வருமான வரியைத் துறையை குற்றம் செலுத்த முடியாது என வருமான வரித் துறை வாதிட்டது. சூர்யாவுக்கு முறைப்படி வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் வருமான வரித் துறை தெரிவித்தது. வருமான வரித் துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி நடிகர் சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று சூர்யாவில் வரி தொடர்பான வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் நெடிசன்களின் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஏற்கனவே இதேபோல் சொகுசுக் கார் மீதான நுழைவு வரியை எதிர்த்து விஜய், தனுஷ் இருவரும் மனுதாக்கல் செய்த நிலையில் நீதிபதி அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் வரி கட்ட வேண்டுமென கண்டனம் தெரிவித்து கடுமையான உத்தரவிட்ட நிலையில் இன்று சூர்யாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுகுறித்த ஹேஸ்டேக் இந்தியா அளவில் இன்று டுவிட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது.