சமையல் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியின் 2வது சீசன், புதிய போட்டியாளர்களுடன் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. 'குக் வித் கோமாளி' பாணியில், ஒரு தேர்ந்த சமையல் கலைஞருடன், சமையல் அறியாத ஒரு பிரபலம் இணையும் இந்த நிகழ்ச்சி, அதன் வித்தியாசமான அணுகுமுறையால் முதல் சீசனிலேயே வெற்றி பெற்றது.
முதல் சீசனை வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வழிநடத்திய நிலையில் 2வது சீசனில், வி.ஜே. ராகேஷ் உடன், பாடகி சிவாங்கி தொகுப்பாளராக பொறுப்பேற்கிறார்.
கடந்த சீசனை போலவே, இந்த முறையும் அதிர்ச்சி அருண், பரத், தீனா, மோனிஷா, முகுந்த், சௌந்தர்யா, கதிர், ஜிபி முத்து உள்ளிட்டோர் 'டூப் குக்குகள்' ஆக களமிறங்க உள்ளனர். இவர்கள் மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சீசனில், நடிகை கிரண், நடிகை பிரியங்கா, டெல்னா டேவீஸ், ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், ப்ரீத்தா, ரோபோ ஷங்கர், மற்றும் பெசன்ட் ரவி போன்ற பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர்.