மார்ச் 1 முதல் க்யூப் மற்றும் UFO-ஐ எதிர்த்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்ததையடுத்து, மார்ச் 1 முதல் தமிழ் படங்களின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. மேலும் தமிழ் படங்களின் வெளியீடு எதுவும் இல்லை. இதனால் தமிழ் படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகைகள் தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமா ஸ்தம்பித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் நடந்த படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டார்கள். இதனால் நடிகர்-நடிகைகள் அனைவரும் ஊருக்கு திரும்பி உள்ளனர். விஜய் நடித்த படம் உள்பட 4 படங்களுக்கு ஓரிரு நாட்கள் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி பின்னர் அவற்றின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.
ஸ்டிரைக் காரணமாக தெலுங்கு படத்தில் நடிக்க சென்று விட்டார் நயன்தாரா. அங்கு சிரஞ்சீவி ஜோடியாக சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் சமந்தா, ரகுல் பிரீத்சிங், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல கதாநாயகிகள் தெலுங்கில் கவனம் செலுத்துகின்றனர். சில நடிகைகள் மலையாள படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். துணை நடிகர்-நடிகைகளும் வேறுமொழி படங்களுக்கு சென்று விட்டதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.