ஜெயிலர் படத்தோடு மோதுறீங்களா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில்!

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:28 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையைக் கணக்கில் வைத்து ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கிலும் மாவீரடு என்ற பெயரில் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது. ஆனால் அதே நாளில் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அதனால் தெலுங்கில் மாவீர்டு படத்துக்கு போதுமான திரைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்போது மேலும் ஒரு தகவலாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி ரிலீஸானால், மாவீரன் படத்துக்கு தமிழிலும் போதுமான திரைகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம் ஜெயிலர் மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா எனக் கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் “அவர்கள் இன்னும் அஃபீஷியலாக அறிவிக்கவில்லை” எனக் கூறி சென்றுள்ளார். இதனால் ஜெயிலர் அதே நாளில் ரிலீஸ் ஆகுமா என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்