கதாநாயக வேடங்கள் குறைந்ததை அடுத்து சரத்குமார் அரசியலில் பிசியாக இருந்தார். இப்போது அதிலும் பெரிய அளவில் சாதிக்க முடியாததால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதனால் அவர் கைவசம் இப்போது பொன்னியின் செல்வன், வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களும் ஒரு வெப்சீரிஸும் உள்ளது. இதில் பிறந்தநாள் பராசக்தி படத்தில் அவர் தன் மகள் வரலட்சுமி மற்றும் மனைவி ராதிகா ஆகியோரோடு நடிக்கிறார்.
மகளுடன் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ள சரத்குமார், ’வரலட்சுமி முதன் முதலில் நடித்த போடா போடி திரைப்படம் சிக்கலில் மாட்டி சில ஆண்டுகளாக வெளிவராமல் இருந்ததால் அவருக்கு அப்போது பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த காலகட்டத்தில் அவருக்கு நான் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து பட வாய்ப்புகள் வாங்கி தரவில்லை. அதுகுறித்து இப்போது வருத்தமாக உள்ளது. அதற்காக என் மகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.