நடிகர் ரஜினிகாந்தும் சத்யராஜும் சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது "எனக்கும் சத்யராஜுக்கும் முரண்பாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால் அது ஆரோக்கியமான முரண்பாடுகள். சத்யராஜ் மனதில் பட்டதை நேரடியாக பேசக்கூடியவர், மனதில் இருப்பதை வெளியே சொல்பவர்களை நம்பலாம், ஆனால் உள்ளே மறைத்து வைத்திருப்பவர்களைத்தான் நம்ப முடியாது," என்று அவர் சத்யராஜின் நேர்மையைப் பாராட்டினார்.
முன்னதாக சத்யராஜ் பேசியபோது "ரஜினிகாந்த் சூப்பர் நடிகர். அதனால்தான் 50 ஆண்டுகளாக அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். ஏழு படங்களில் அவருக்கு வில்லனாக நடித்திருக்கிறேன். இந்த முறை நண்பனாக நடிக்கலாம் என்றுதான் இந்த படத்தில் அவருடன் இணைந்துள்ளேன்," என்று கூறினார்.