இப்படிப்பட்ட பாலாபிஷேகம் எனக்கு தேவையில்லை: ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (09:28 IST)
நேற்று ஒரு ரசிகர் கிரேனில் தொங்கியபடி ராகவா லாரன்ஸ் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகிய நிலையில் இப்படிப்பட்ட பாலாபிஷேகம் எனக்கு தேவையில்லை என்று ரசிகர்களுக்கு அன்பு எச்சரிக்கையுடன் ஒரு அறிக்கை ஒன்றை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
அன்புள்ள ரசிகர்கள், நண்பர்களுக்கு.. இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். எனது பேனருக்கு ரசிகர் ஒருவர் கிரேனில் தொங்கியபடி பாலாபிஷேகம் செய்வதைப் பார்த்தேன். அந்த வீடியோவைப் பார்த்து எனக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது.
 
உங்களது உயிரை பணயம் வைத்து உங்களுக்காக வீட்டில் காத்திருக்கும் உங்கள் உறவுகளின் உணர்வுகளை மதிக்காது இது போன்ற செயல் மூலம் நீங்கள் அன்பை வெளிப்படுத்த அவசியமில்லை. என் மீதான அன்பை வெளிப்படுத்த தயவு செய்து இப்படியான அபாயகரமான வேலைகளைச் செய்யாதீர்கள். இதை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
ஒருவேளை நீங்கள் உங்கள் அன்பை என்னிடம் நிரூபிக்க வேண்டும் என விரும்பினால் பள்ளிக் கட்டணமும் புத்தகக் கட்டணமும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுங்கள். வயது முதிர்ந்த பலர் உணவின்றி வாடுகின்றனர். அவர்களுக்கு உணவு அளியுங்கள். இது போன்ற செயல்கள்தான் என்னை மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ளச் செய்யும்.
 
அதைவிடுத்து உயிரைப் பணையம் வைத்து நீங்கள் செய்யும் பாலாபிஷேகங்கள் என்னை நெகிழச் செய்யாது. எனது ரசிகப் பெருமக்களே இனி இதை எப்போதும் நினைவில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
 
இவ்வாறு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்