ஹீரோவ ரௌடியா காட்டுனா குடும்ப படம்… இது சர்ச்சைப் படமா? ரசிகருக்கு ஆர் ஜே பாலாஜி கேள்வி!

வெள்ளி, 18 மார்ச் 2022 (16:26 IST)
நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜியின் அடுத்த படமான வீட்ல விஷேசம் படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. வீட்ல விஷேசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜுன் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ஊர்வசிக்கு வளைகாப்பு நடத்துவது போலவும் அவரை சுற்றி குடும்பத்தினர் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் கவனத்தை குவித்துவரும் நிலையில் இந்த போஸ்டருக்கு கீழே கமண்ட் செய்த ஒரு நபர் ‘சர்ச்சையான கதைக்களம்…. தமிழ்நாட்டில் இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என தெரியவில்லை’ எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள பாலாஜி ‘ ஆமா ஒருத்தவங்க கர்ப்பமாக இருக்குற மாதிரி படம் எடுத்தா சர்ச்சை படம். ஆனா ஹீரோ ரௌடியா, டானா, திருடனா, கொலைகாரான இருக்குற மாரி படம் எடுத்தா அது பேமிலி படம்’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்