தியேட்டர் காத்து வாங்குது ; பில்டப் தேவையா? - விஷாலிடம் எகிறும் தயாரிப்பாளர்

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (18:43 IST)
நடிகர் சங்க தேர்தலில் அணி அமைத்து வெற்றி பெற்ற நடிகர் விஷால் அடுத்து தயாரிப்பாளர் சங்கம் மீது குறி வைத்துள்ளார்.


 

 
தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக பல கருத்துகளை கூறி வந்த விஷால், விரைவில் நடக்கவுள்ள சங்க தேர்தலிலும் அணி அமைத்து களம் இறங்குகிறார். தாயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு ஏற்கனவே, விஷாலுக்கு எதிராக பல கருத்துகளை கூறியிருந்தார். 
 
இந்நிலையில், பாஸ்மார்க், உளவாளி ஆகிய படங்களை தயாரித்த  தயாரிப்பாளர் கண்ணப்பன் விஷாலை நோக்கி பல கேள்விகளை முன் வைத்துள்ளார். 
 
ஆந்திராவில் உள்ள ஹீரோக்கள் தங்களின் சம்பளத்தை மொத்தமாக வாங்குவதில்லை. சிறிது சிறிதாக வாங்கிக் கொள்கிறார்கள். இந்த நடைமுறையை தமிழ் சினிமா துறையில் விஷாலால் கொண்டு வரமுடியுமா? வெளியூர் படப்பிடிப்பு எனில் நடிகர்கள் தங்கள் காரில் வருவதில்லை. அப்படி வந்தால் அதற்கான பெட்ரோல் செலவையும் தயாரிப்பாளர் தலையில்தான் கட்டுகிறார்கள். அதேபோல், தயாரிப்பாளரின் செலவில்தான் சாப்பிடுகிறார்கள். அவர்கள் உதவியாளர்கள் அனைவருக்கும் பேட்டா கொடுக்குமாறு தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறார்கள். பல கோடி சம்பளம் பெறும் அவர்கள் அதை கூட கொடுக்கக்கூடாதா?
 
தற்போது மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிக்கிறார் விஷால். அதேபோல் படப்பிடிப்பிற்கும் வந்தால், தயாரிப்பாளருக்கு செலவு மிச்சமாகுமே. இதை அவர் செய்வாரா?
சம்பளத்தில் பாக்கி இருந்தால் சில நடிகர்கள் டப்பிங் பேச வருவதில்லை. இதனால் கடைசி நேரத்தில் தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். நாசர், சத்யராஜ் போன்ற நடிகர்கள் எளிமையாக இருப்பார்கள். கேரவான் கூட கேட்க மாட்டார்கள். இதுபோல் மற்ற நடிகர்களும் நடந்து கொள்ள விஷால் உறுதி மொழி கொடுப்பாரா?இவற்றையெல்லாம் செய்து காட்டுவேன் என விஷால் உறுதி மொழி கொடுத்தால் அவருக்காக நான் கூட பிரச்சாரம் செய்வேன். 
 
வார இறுதி நாட்கள் தவிர மற்ற நாட்களில் தியேட்டர்கள் காற்று வாங்குகிறது. அப்படி இருக்கும் போது, நடிகர்கள் ஏன் இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை” என அவர் காட்டமாக தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்