ஒரே மாதிரியான கதைக் கருவைக் கொண்ட சில குறும்படங்களை இணைத்து ஒரு திரைப்படமாக எடுப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று வரும் இந்த வகையான ஜானர் படங்கள் இப்போது அதிகளவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. வைல்டு டேல்ஸ் எனும் அர்ஜெண்டினிய படம் இந்த ஜானரில் வெளிவந்து உலக அளவில் அங்கிகாரம் பெற்றதை அடுத்து இப்பொது உலகெங்கும் பல மொழிகளில் அதுபோல படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் தமிழில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஆணவக்கொலையை மையப்படுத்தி பாவக்கதைகள் என்ற படம் உருவாகி வரும் டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் தங்கம் என்ற படத்தை சுதா கொஙகரா இயக்கியுள்ளார். இதில் சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தைப் பார்த்துள்ள நடிகர் மாதவன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதில் சுதா இயக்கியதிலேயே இதுதான் சிறந்த படம். எளிமையான இந்த கதை ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மேற்கத்திய இசையில் இருந்து கிராமிய இசைக்கு மாறியுள்ளார். இதைதான் நான் காண விரும்பினேன் எனக் கூறியுள்ளார்.