ஜிஎஸ்டி வரியை மட்டும் கட்டிவிடுகிறோம், தமிழக அரசின் 30% வரியை நீக்குங்கள் என்ற கோரிக்கையுடன் திரையுலகினர் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதற்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில் பெரிய நடிகர்களும், பெரிய தயாரிப்பாளர்களும் போராட்ட களத்திற்குள் குதிக்காமல் இந்த பிரச்சனை தீராது என்றே திரையுலகினர் கூறுகின்றனர். இதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் கமல் ஒரு காட்டமான அறிக்கையை கொடுத்துள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசுக்கும் கமலுக்கும் ஏழாம் பொருத்தம் இருந்து வரும் நிலையில் கமல் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பீகாரை விட தமிழகம் லஞ்சத்தில் முன்னேறி வருகின்றது என்று குத்திக்காட்டியுள்ளார். தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறிய கமல் இப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன் என்றும் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினிகாந்த், அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இதுகுறித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த முறை தமிழக அரசை ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை என்று திரைத்துறையினர் ஒரு முடிவில் இருக்கின்றனர்.