தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது கூலி,ஜனநாயகன் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அனிருத் உலகம் முழுவதும் அதிகளவில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் வரும் 26 ஆம் தேதி சென்னையில் ஹுக்கும் சென்னை என்ற பெயரில் கச்சேரி நடத்தவிருந்தார். ஆனால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதாலும், அதற்கு நிகழ்ச்சி நடக்கும் இடம் போதுமானதல்ல என்பதாலும் தற்போது இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய இடம் மற்றும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த கச்சேரி ரத்தானதற்கு ரஜினிகாந்தின் கூலி படமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் கூலி திரைப்படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது. அதற்கான பின்னணி இசைப் பணிகளில் தற்போது இருப்பதாகவும், அதனால் கச்சேரிக்கு போதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.