உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி உள்ளதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். Valiant எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. பல அரசியல் தலைவர்கள் நேரை சந்தித்து வாழ்த்தினர். மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார். அதை கௌரவிக்கும் வகையிலும் இசைஞானி சினிமாவுக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும் அவருக்கு தமிழக அரசு சார்பில் வரும் 13 ஆம் தேதி பாராட்டு விழா நடத்துகிறது.
அதில் தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் மூகாம்பிகை கோவிலுக்கு 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம் மற்றும் தங்க வாளைக் காணிக்கையாக செலுத்தியுள்ளார் இளையராஜா. தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தரான இளையராஜா அடிக்கடி அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.