இளையராஜாவின் சிம்ஃபொனி நிகழ்ச்சி சென்னையில் எப்போது?.. ஆலோசனை!

vinoth

வெள்ளி, 25 ஜூலை 2025 (09:21 IST)
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி உள்ளதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’Valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. பல அரசியல் தலைவர்கள் நேரை சந்தித்து வாழ்த்தினர். மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார்.

இதையடுத்து அவரை சந்தித்து வாழ்த்துக் கூறிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ‘இசைஞானியின் சிம்ஃபொனி தமிழக அரசு சார்பில் சென்னையில் நிகழ்த்தப்படும்’ என அறிவித்தார். அந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான இடம், அதற்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து தற்போது அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்