உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டமாக, ஏப்ரல் 12 முதல், நடிகர் விஸ்வக் சென்னின் "காமி" திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல் திரையிடப்படுகிறது!
கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வி செல்லுலாய்டு வழங்க, அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்கியுள்ள "காமி" திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதாவின் தெலுங்கு படமான காமி ஒரு உணர்ச்சிகரமான கதையையும், ஒரு அட்டகாசமான சினிமா அனுபவத்தையும் ஒருங்கே தரும் படைப்பாக அமைந்துள்ளது. விஷ்வக் சென் மற்றும் சாந்தினி சௌத்ரியின் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களின் வழியே, மனித மனத்தின் விசித்திரங்களைப் பேசுவதுடன், ஆத்மாவின் தேடலை ஆராய்வதோடு, வாழ்வின் காலக்கடிகரமாக, விந்தை காட்டும் படைப்பாக உருவாகியுள்ளது. இயற்கையை மாற்ற முயலும் மனிதகுலத்தின் முயற்சி, பேரழிவு விளைவுகளை உருவாக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.
மனித ஸ்பரிசத்தை உணர முடியாத ஒரு அரிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு அகோரி தான் ஷங்கர். துரோணகிரி மலையில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மர்மமான காளானான மாலிபத்ராவைத் தேடி அவர் செல்கிறார். வழியில், ஷங்கர் இதேபோன்று அந்த காளானைத் தேடும் நுண்ணுயிரியலாளர் ஜானவியை (சாந்தினி சௌத்ரி) சந்திக்கிறார். அவர்களின் விதி, இமயமலையின் பனிக்குளிரில் அவர்களை அலைக்கழிக்கிறது. இன்னொரு புறம் இந்தக்கதை இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அம்சமாக அறியப்பட்ட தேவதாசி பாரம்பரியத்தின் பாதகங்களைப் பேசுகிறது.