மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில் படத்தின் கதைக்களம் குறித்து இயக்குனர் நலன் குமாரசாமி பேசியுள்ளார். அதில் “எம் ஜி ஆர் ரசிகர் ஒருவர் தன் பேரன் ராமுவோடு வாழ்ந்து வருகிறார். தன் பேரனுக்கு எம் ஜி ஆரோடு ஏதோ தொடர்பு உள்ளதாக அவர் நினைக்கிறார். அந்த இளைஞன் கவலையில்லாத வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு இளைஞனாக வாழ்கிறான். காவல்துறையில் பணியாற்றும் அவனால் அவன் தாத்தா ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்ள ராமுவிடம் நடக்கும் ஒரு மாற்றமும் அதன் பின்னான திருப்பங்களும்தான் கதை. இந்த படம் 80 மற்றும் 90 களில் வெளியான மசாலாப் படங்களை போல இருக்கும்” எனக் கூறியுள்ளார்.