தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் அறிமுகமாகி, பீட்சா மூலம் பிரபலமாகி, தற்போது ஹீரோ, வில்லன் என இருமுகனாக இந்தி சினிமா வரை கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனில் தனது நடிப்புக்கு முந்தைய வாழ்க்கை குறித்து அவர் பேசியுள்ளார்.
அதன்படி, ஆரம்பத்தில் விஜய் சேதுபதி ஒரு கம்பெனியில் அக்கவுண்டண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மாதம் ரூ.3,500தன் அவர் சம்பளம். அப்போது அவரது நண்பர் ஒருவர் துபாயில் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அப்போது வி.சேதுபதியிடம் பாஸ்போர்ட் இல்லை. 10 நாட்களில் துபாய் செல்ல வேண்டும்.
இந்நிலையில் கவுன்சிலரை போய் பார்த்து காசு கொடுத்தால் வேலை நடக்கும் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதியிடம் காசு இல்லை. எனவே நேராக டிகிரி சர்டிபிகேட், ரேஷன் கார்ட் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு கமிஷனர் ஆபிஸ் சென்றுள்ளார். அங்கிருந்த ஒருவரிடம் அவற்றை காட்டி, தான் குடும்ப நிலையை எடுத்து சொல்லி உதவுமாறு கேட்டிருக்கிறார். அவரும் அடுத்த நாள் பாஸ்போர்ட் அப்ளிகேஷனை எடுத்துக் கொண்டு ஏரியாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் போக சொல்லியுள்ளார்.
அங்கு விஜய் சேதுபதிக்கு தேவையான உதவிகளை செய்து வைத்திருக்கின்றனர். அதற்கு பிறகு துபாய் சென்ற விஜய் சேதுபதி கஷ்டப்பட்டு சம்பாதித்து ஓரளவு குடும்ப நிலையை உயர்த்தியுள்ளார். ஆனாலும் நினைத்த அளவுக்கு வாழ்க்கை மாறவில்லை. தான் தனது 20 வயதில் ஏதாவது சாதிக்க முடியாதா, குடும்பத்தை எப்படியாவது மேலே கொண்டு வந்துவிட முடியாதா என்று ஏங்கியதாகவும்,இப்போது அதை நினைத்து பார்க்கும்போது ஏக்கத்தோடு சுற்றிய நினைவுகள் வருவதாகவும் பேசியுள்ளார்.