ப்ரதீப், மமிதா பைஜு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. ஆறு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 35 கோடி ரூபாய் என்றும் போட்டதை விட இரு மடங்கு இலாபத்தை இந்த படம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் டியூட் படம் தற்போது ஒரு காரணத்துக்காக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. டியூட் படம் பல ஆண்டுகளுக்கு முன்னால் சரத்குமார், தேவயானி மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவான பாட்டாளி படத்தின் கதையை அப்படியேக் காப்பி அடித்திருப்பதாக தமிழ் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதே போல தெலுங்கில் வெளியான கன்னிகாதானம் என்ற படமும் இதே கதையமைப்பைக் கொண்ட படம்தான் என தெலுங்கு ரசிகர்களும் ட்ரோல் செய்கின்றனர்.