கோடை விடுமுறை ரிலீசுக்கு தயாராகி வரும் " டபுள் டக்கர்" திரைப்பட இசை வெளியீட்டு விழா

J.Durai

திங்கள், 18 மார்ச் 2024 (07:58 IST)
ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட் சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர்  நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'.  கோடை விடுமுறையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இப்படத்தின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை  சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க பிரம்மாண்டமாக நடைபெற்றது. 
 
அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி ...
 
"எனக்கு இருக்கும் மிகச்சில  நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தீரஜ். அவருக்காக இங்கு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பது சந்தோஷம். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். 
 
'டபுள் டக்கர்' எனும் தலைப்பு இவருக்காகவே உருவானது போல் இருக்கிறது, ஏனென்றால் மருத்துவர், நடிகர் என்று இரண்டு பரிமாணங்களிலும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தீரஜ். வித்யாசாகர் அவர்களின் இசைக்கு சிறு வயது முதல் இருந்து ரசிகன் நான். அவர் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இளைஞர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியுள்ளார். அவரது இசை இந்த படத்திற்கு கட்டாயம் பெரிய பக்கபலமாக இருக்கும் என்றார்."
 
'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது...
 
"'அயலான்' திரைப்படத்தை இயக்கி உள்ளதால் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். அதை செய்துள்ள 'டபுள் டக்கர்' குழுவினருக்கு வாழ்த்துகள். 
 
தீரஜ் அவர்களை ஒரு இருதய சிகிச்சை மருத்துவராக நான் அறிவேன். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய மருத்துவர் பணியையும் நடிப்பையும் அவர் மேற்கொள்வது மிகவும் சவாலானது. ஆனால் அதை அவர் திறம்பட செய்து வருகிறார். இருதய சிகிச்சை நிபணரான அவர் திரைப்படங்களின் மூலம் மக்களின் இதயங்களையும் வெல்வார் என்று நம்புகிறேன். மிகவும் வித்தியாசமான, கடின உழைப்பு தேவைப்படுகிற இந்த முயற்சியை சாத்தியமாக்கி உள்ள இயக்குநர் மீரா மஹதி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்."
 
இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசியதாவது...
 
"'டபுள் டக்கர்' படத்தின் நாயகன் தீரஜ்ஜை ஒரு சிறுவனாக தெரியும், பின்னர் மருத்துவராக தெரியும். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் திரைப்படங்களில் நடிப்பதாகவும் 'டபுள் டக்கர்' திரைப்படத்திற்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் இயக்குநர் மீரா மஹதி இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன். 
 
'டபுள் டக்கர்' படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்காற்றி உள்ளார்கள். குறிப்பாக தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு அபாரமானது. கடந்த 34 ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இசைக்கு வயதே கிடையாது, நல்லிசைக்கும் மெல்லிசைக்கும் தமிழ் மக்கள் என்றுமே ஆதரவு அளிப்பார்கள். உங்களின் அன்பும் ஆதரவும் தான் என்னை இங்கே நிற்க வைத்துள்ளது. 'டபுள் டக்கர்' படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு பாடல்களும் நான்கு வகையானவை. இசையையும் படத்தையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன், நன்றி."
 
படத்தின் நாயகன் தீரஜ் பேசியதாவது...
 
"ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிறகு என்னுடைய படத்திற்கு இந்த மேடையை வழங்கிய சாய்ராம் கல்லூரிக்கு நன்றி. 'டபுள் டக்கர்' படத்திற்கு அருமையான இசையை தந்த வித்யாசாகர் அவர்களுக்கு மிக்க நன்றி. 
 
நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு தெரிவித்த இயக்குநர் ரவிக்குமார், ஜெயம் ரவி அவர்களின் அன்புக்கு நன்றி. இப்படத்தைப் பற்றி கூற வேண்டும் என்றால் டபுள் டக்கரை திரையரங்கில் பாருங்கள், மகிழுங்கள், மகிழ்ச்சியுடன் திரையரங்கை விட்டு செல்லுங்கள். ஒரு கலகலப்பான படத்தை தர வேண்டும் என்ற எங்களது ஆசை நிறைவேறி உள்ளது. என்னுடன் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி."
 
நாயகி ஸ்முரிதி வெங்கட் பேசியதாவது...
 
"எல்லோருக்கும் வணக்கம். மாணவர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியிடப்படுவது மிக்க மகிழ்ச்சி. சிறு வயது முதலே வித்யாசாகர் அவர்களின் மிகப்பெரிய ரசிகை நான். அவரது இசையில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 
 
நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஜெயம் ரவி அவர்கள் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. 'டபுள் டக்கர்' படத்தை பற்றி கூற வேண்டும் என்றால் இந்த படம் உங்களை மகிழ்விக்கும், உற்சாகப்படுத்தும், கட்டாயமாக ஏமாற்றாது. இப்படத்திற்காக மிகச் சிறந்த குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது, அனைவரும் திரையரங்குகளில் இப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."
 
இயக்குநர் மீரா மஹதி பேசியதாவது...
 
"என்னுடைய முதல் படத்திற்கு இசையமைத்து எனக்கு மிகப்பெரிய பெருமையை வழங்கி இருக்கிற வித்யாசாகர் சாருக்கு நன்றி. இங்கு வந்து சிறப்பித்துள்ள இரண்டு ரவிகள் ஆகிய ஜெயம் ரவி சார் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. 
 
இளம் தலைமுறையாகிய உங்களை நம்பித்தான் இந்தியாவிலேயே புதிய முயற்சியாக 'டபுள் டக்கர்' திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். கிராபிக்ஸ் கதாபாத்திரங்களை நடிகர்களுடன் நடிக்க வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்துடன் வந்து இப்படத்தை ரசிக்கலாம்." 
 
நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது...
 
"இந்த படம் ஒரு அருமையான குழுவின் கூட்டு முயற்சி. இதில் எனக்கு சின்ன பாத்திரம் தான், ஆனால் மிகவும் சிறந்த வேடம். கிராபிக்ஸ் பாத்திரங்களை வைத்து ஒரு புதுமையான முயற்சியை 'டபுள் டக்கர்' குழுவினர் எடுத்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாகியுள்ள இப்படத்தை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் இன்னும் நிறைய படங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. நாயகன் தீரஜ் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். வித்யாசாகர் அவர்களின் இசையில் எத்தனையோ படங்களில் நான் நடித்துள்ளேன். அவரது அற்புதமான இசை இப்படத்தை மெருகேற்றி உள்ளது."
 
நடிகர் காளி வெங்கட் பேசியதாவது...
 
"இப்படத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். பெயருக்கு ஏற்ற மாதிரி டபுள் டக்கர் மிகவும் சிறப்பான திரைப்படமாக இருக்கும். வித்யாசாகர் அவர்களின் இசையில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எங்கள் வீட்டில் அனைவருமே அவரது ரசிகர்கள். தீரஜ் அவர்களின் சுறுசுறுப்பு ஆச்சரியமானது. இயக்குநர் மீரா மஹதி வித்தைக்காரர். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை இந்த படத்தை அனைவரும் ரசிக்கலாம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்