கடந்த வாரம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களின் இயக்குனர் ரவிக்குமார் தன்னுடைய முகநூலில் இந்த படம் பற்றி பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் “விடுதலை இது முழுக்க கற்பனை கதை என்று முன் அறிவிப்போடு படம் ஆரம்பித்தாலும் இது கற்பனையல்ல நம்மை சுற்றி நடந்த, நடந்துகொண்டிருக்கிற உண்மைதான். தமிழ்ப்பரப்பெங்கும் நடந்த சம்பவங்களை ஒரு பகுதியில் நடப்பதுபோல காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தான் எடுத்துக்கொள்ளும் கதைத்தேர்வில் மக்கள் மீதான அக்கறையும் அன்பும் மேலேங்கியிருப்பது அவரது மானுட நேயத்தை காட்டுகிறது.
சூரி அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு படத்தை கைபிடித்து கூட்டிசெல்கிறது. சூரி அண்ணனி்ன் நடிப்பு அருமை! விஜய்சேதுபதி அவர்கள் வாத்தியார் கதாபாத்திரம் அவரது உடல்மொழி கனகச்சிதம். சேத்தன் அவர்களின் நடிப்பும் அசத்தல். தொழில்நுட்ப கலைஞர்களின் பணி பாராட்டத்தக்கது. அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுகிறது.” எனப் பாராட்டியுள்ளார்.