தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து பல திரைப்பிரபலங்களும் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது இயக்குனரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பொதுவாக பிரபலங்கள் யாராவது மறையும் சமயங்களில் அவர்களுடன் தனக்கு இருந்த உறவு குறித்தும், பிணைப்பு குறித்தும் சில நினைவுகளை சீமான் பகிர்வது வழக்கம். அவ்வாறு பகிரும் பல தகவல்கல் உண்மையில்லை என சிலர் கருதுகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் குறித்து சீமான் பேசியபோது, தான் விஜயகாந்த் நடித்த தவசி படத்திற்கு வசனங்கள் எழுதியதாக குறிப்பிட்டிருந்தார்.
தவசி படத்தை எழுதி இயக்கியவர் உதய சங்கர். அந்த படத்தில் இயக்குனர் கார்டில் திரைக்கதை, வசனம், இயக்கம் உதய சங்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி சீமானை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் தவசி படத்தின் நன்றி கூறும் ஸ்லைடில் சீமான் பெயர் இடம்பெற்றுள்ளதை சீமான் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த படத்தில் நடித்த காமெடி நடிகர் கொடுக்காபுளியும் ஒரு நேர்க்காணலில் சீமான் வசனம் எழுதியதை தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் வரும் பாடல் தான் பாடியதுதான் என சீமான் கூற அது கிண்டலுக்கு உள்ளானது. பின்னாளில் வெற்றிமாறனே ஒரு பேட்டியில் சீமானை நேரில் சென்று சந்தித்து அந்த பாடலை பாட சொல்லி கேட்டு வாங்கி ஜி.வி.பிரகாஷிடம் கொடுத்து அந்த மெட்டில் இசையமைக்க சொன்னதாக குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.