தற்போது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமுமே எதிர்பார்த்து காத்திருக்கும் படம் என்றால் அது ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி தான்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இந்த படத்தில் உபேந்திரா, ஆமிர் கான், நாகர்ஜூனா உள்ளிட்ட பல மொழி ஸ்டார் நடிகர்களும் நடித்துள்ளனர். சமீபமாக படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி கலெக்ஷன் செய்யும் படமாக கூலி மாறுமா என்பதே கோலிவுட் வட்டாரத்தின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆகஸ்டு 14ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் கதை சுருக்கம் குறித்து Letterboxd போன்ற சில தளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு வயதான தங்கக் கடத்தல்க்காரர் அவரது பழைய மாஃபியா கும்பலை மீண்டும் ஒன்று சேர்க்க முயல்கிறார். இதற்காக விண்டேஜ் தங்கக் கடிகாரங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் திருடப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார். ஆனால் அவரது சாம்ராஜ்யத்தை மீட்டெடுப்பதில் பல திருப்பங்கள் நிகழ்கிறது. குற்றம், பேராசை, துரோகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய உலகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உண்மை கதை என்றால் தரமான சம்பவம் லோடிங் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இந்த கதை சுருக்கம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வாட்ச்சில் மறைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் என்ன? தேவா (ரஜினிகாந்த்) ஏன் தனது மாஃபியாவை விட்டு போனார்? மீண்டும் ஏன் அவர்களை ஒன்று சேர்க்கிறார்? என்ற பல கேள்விகள் ரசிகர்களுக்கு எழுந்துள்ள நிலையில், இதற்கு படத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய அட்டகாசமான பதில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K