உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 80 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மிக வேகமாக வைரஸ் பரவி வரும் நிலையில் சினிமா உள்ளிட்ட பல தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வருகிறது. அதனை ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள், செய்தித்தாள் வாழ்த்துகள் ஆகியவற்றை அளிப்பதைத் தவிர்த்து பத்திரமாக இருக்க வேண்டும் எனத் தனது ரசிகர்மன்ற நிர்வாகி மூலமாக அனைத்து மன்றங்களும் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற பிகில் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட வுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். மேலும் விஜய் பிறந்தநாளன்று மாஸ்டர் படத்தின் டீசரும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.