நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. அதனை தொடர்ந்து நேற்று இந்தி ட்ரெய்லரும், இன்று தெலுங்கு ட்ரெய்லரும் வெளியாகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் படத்தின் கதை சுருக்கும் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது வைரலாகியுள்ளது. அதில், நகரில் பரபரப்பான பகுதி ஒன்றை பயங்கரவாதிகள் தங்கள் அமைப்பின் தலைவரை விடுவிக்க மிரட்டல் விடுத்து கைப்பற்றுகின்றனர். இதற்காக பயங்கரவாதிகளை பிடிக்க தனிப்பிரிவு அமைக்கப்படும் நிலையில் அதன் தலைவருக்கு, பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் ரா அமைப்பின் முன்னாள் அதிகாரி இருப்பது தெரிய வருகிறது.
அதேசமயம் பயங்கரவாதிகளின் கோரிக்கையை ஏற்று பயங்கரவாத தலைவனை விடுவிக்க அரசு சம்மதிக்கின்றது. இந்நிலையில் அந்த முன்னாள் ரா உளவு அதிகாரி புத்திசாலி தனமாக செயல்பட்டு பிணை கைதிகளை மீட்டு பயங்கராவதிகளை ஒழித்துக் கட்டுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கதை சுருக்கம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான விறுவிறுப்பை கூட்டியுள்ளது.