ஆட்டோகிராப் தாக்கம் செலுத்தியதா? பிரேமம் இயக்குனர் பதில்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (09:45 IST)
பிரேமம் படத்தின் மூலமாக தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமானார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியான போதே தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராஃப் திரைப்படம் போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அதே போன்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதில் அளித்துள்ளார். அதில் ‘ஆட்டோகிராப் படம் வந்த போது அதைப் பல முறை பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்த போது இயக்குனர் சேரனால் உந்தப்பட்டேன். ஆனால் பிரேமம் உருவாக்கத்தின் போது ஆட்டோகிரஃப் போல இருக்கக் கூடாது என நினைத்தேன். ஏனென்றால் அது ஒரு அழகான படம். அதில் எதையும் நான் தொட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அது போல ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற சேரனின் அக்கறைதான் எனக்கு உந்துதலாக இருந்ததே தவிர ஆட்டோகிராப் படத்தின் தாக்கம் இல்லை’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்