தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. கமல்ஹாசன் கோவை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தற்போது கமல்ஹாசன் மூன்று மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் இருக்கிறார். இந்நிலையில் அவர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகையான வினோதினி இப்போது கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் “நம்மவர் போன்ற ஒரு தலைவரை தமிழ்நாடு மட்டுமல்ல வினோதியும் தவறவிட்டுவிட்டார். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மிகுந்த மன வருத்தத்தோடு வெளியேறுகிறேன்” எனக் கூறியுள்ளார்.