நடிகை இஷாரா தலைமறைவான விவகாரத்தில், அந்த படத்தின் இயக்குனர் மீது இஷாரா பகீர் புகார்களை கூறியுள்ளார்.
தமிழில் வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை இஷாரா. இதனையடுத்து, ‘பப்பாளி’ என்ற படத்தில் நடித்தார். தற்போது ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
டிஎன் 75 கே.கே. கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில், ஜோசப் லாரன்ஸ் தயாரிப்பில் கேவின் ஜோசப் இயக்கி வருகிறார். இந்நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு வருவதாக இருந்த இஷாரா திடீரென தலைமறைவாகி விட்டார் என்று, அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகார் கூறியிருந்தனர்.இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவாகரம் பற்றி முதல் முறையாக நடிகை இஷாரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது “இயக்குனர் கெவின் ஜோசப்பின் நடத்தை சரியில்லை. நான் ஆறு மாதம் கால்ஷீட் கொடுத்திருந்தேன். ஆனால், இரண்டு நாட்கள் மட்டும் என்னை வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள்.
அந்த இரண்டு நாட்களும் எனக்கு மோசமான அனுபவங்களே கிடைத்தது. இயக்குனர் கெவின் ஜோசப் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படப்பிடிப்பில் எல்லோருக்கும் முன்னிலையிலும் என்னை வாடி போடி என்றுதான் அழைப்பார். வயதில் மூத்தவர் என்று பொறுத்துக் கொண்டேன்.
மேலும், வசனம் சொல்லிக் கொடுக்கிறேன், நடிப்பு சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர் நடந்து கொண்ட விதம் அநாகரீகமானது. சுவற்றோடு என்னை சாய்த்து நிற்க வைத்து இரட்டை அர்தத்தில் பேசுவார். அடிக்கடி தொட்டு தொட்டு பேசுவார். அது பிடிக்காமல்தான் அந்த படத்திலிருந்து விலகி விட்டேன்.
நான் கொடுத்த தேதிகள் அனைத்தையும் வீணாக்கி விட்டார்கள். தற்போது என்னைப் பற்றி தவறாக பேசி வருகிறார்கள். அவர்களை சட்டரீதியாக சந்திக்க நானும் தயாராகவே இருக்கிறேன். உண்மையில் அவர்கள் மீது புகார் கொடுக்காமல் இருந்ததற்கு எனக்கு அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார் இஷாரா.