கவர்ச்சியாக நடிக்க சொன்னார்கள் : தலைமறைவான இஷாரா தரப்பு விளக்கம்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (15:57 IST)
சினிமா தயாரிப்பாளர் கூறியுள்ள புகாருக்கு நடிகை இஷாரா தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.


 

 
தமிழில் வெளிவந்த  ‘சதுரங்க வேட்டை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை இஷாரா. இதனையடுத்து,  ‘பப்பாளி’ என்ற படத்தில் நடித்தார். தற்போது  ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
டிஎன் 75 கே.கே. கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில்,  ஜோசப் லாரன்ஸ் தயாரிப்பில் கேவின் ஜோசப் இயக்கி வருகிறார்.
 
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளார் மற்றும் இயக்குனர் கூறுகையில்,  கடந்த 2016 பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அன்று நடிகை இஷாராவுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி ரூ.75 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்கு பின்பு படப்பிடிப்பு நடைபெற்றது.
 
நாங்கள் 20 நாட்கள் கால்ஷீட் கேட்டோம், ஆனால் நடிகை இஷாரா 2 நாட்கள்தான் கால்சீட் கொடுத்தார். பின்பு அவரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அவரை தொடர்பு கொள்ளும் போது எல்லாம் துபாயில் இருப்பதாகவும், கேரளாவில் இருப்பதாகவும் வாட்ஸ்ஆப் மூலமே பதில் அளிக்கிறார். பல நேரங்களில் அவரது செல் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் கூறியிருந்தனர்.
 
இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை இஷாராவுக்கு நெருக்கமான வட்டாரம் இந்த புகாருக்கு பதில் அளித்துள்ளது. அவர்கள் கூறும்போது  “ அந்த படத்தின் இயக்குனர் இஷாராவிடம் சொன்ன கதை வேறு. ஆனால் எடுத்த கதை வேறு. அவர் இதுவரை எந்த படத்திலும் கிளாமராக நடித்ததில்லை. ஆனால் அவருக்கு நிறைய கிளாமர் காட்சிகள் வைத்திருந்தனர். இது அவர் படப்பிடிப்புக்கு போன பிறகுதான் தெரிந்தது. 
 
படப்பிடிப்பையும் அவர்கள் சொன்ன தேதியில் நடத்தவில்லை. திடீர் திடீரென படப்பிடிப்புக்கு அழைப்பார்கள். அதனால் இஷாரா நடிக்காமல் ஒதுங்கிக் கொண்டார். அவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால் நாங்கள் அதை எதிர்கொள்வோம். அப்போது இன்னும் சில உண்மைகளை கூற வேண்டியிருக்கும்” என்று கூறினர்.
அடுத்த கட்டுரையில்