நீங்களும் குறைந்த விலையில் விண்வெளியை சுற்றி பார்க்கலாம் – எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (19:54 IST)
சாதாரண மக்களுக்கும் விண்வெளிக்கு ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றும் வண்ணம் ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டுவர இருக்கிறது நாசா விண்வெளி மையம்.

நாசா மற்றும் உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் கூட்டமைப்பில் உருவானதுதான் சர்வதேச விண்வெளி மையம் (International Space Station). இதில் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் எப்போதும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை விண்வெளிக்கு அனுப்பி வைப்பார்கள். விண்வெளியில் ஒரு சிறிய கிராமம் அளவு உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையம் பல விஞ்ஞானிகளோடு பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதில் போய் ஒரு நாள் தங்கிவிட்டு வர வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதைதான் நாசா தற்போது திட்டம் போட்டு வருகிறது.

அடிக்கடி பொருட்களை அனுப்பும் விண்கலங்களில் விண்வெளியை சுற்றி பார்க்க விருப்பப்படும் மக்களையும் அனுப்பிவிடுவதுதான் அந்த திட்டம். மேலும் விண்வெளி ஆராய்ச்சிக்கென பல நாடுகள் பல மில்லியன் டாலர்களை வருடந்தோறும் செலவு செய்து வருகின்றன. இந்த செலவினத்தை குறைக்கும் வகையில் விண்வெளி சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். அதன் மூலம் கிடைக்கும் தொகை இந்த ஆராய்ச்சி செலவுகளுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும் என நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல்.

ஒருமுறை விண்வெளிக்கு பயணிகள் தாங்கிய ராக்கெட்டை அனுப்ப ஆகும் செலவு 50 மில்லியன் டாலர்களாம் (இந்திய மதிப்பில் 346கோடி). எனவே ஒரு பயணி ஒருநாள் இரவு சர்வதேச விண்வெளி மையத்தில் தங்குவதற்கு தோராயமாக 35000 டாலர்கள் (இந்திய மதிப்பில் 24லட்சத்து 30ஆயிரம் ரூபாய்) செலவு ஆகுமாம். மற்றொரு விசயம் விண்வெளிக்கு சென்றவர்கள் நினைத்த நேரத்தில் திரும்ப வரும் வசதியெல்லாம் கிடையாது. ஒருமுறை சென்றால் திரும்ப வர 30 நாட்கள் ஆகும். ஒருநாளைக்கு 35000 டாலர்கள் வீதம் 30 நாட்களுக்கு அங்கே தங்குவதற்கான பணத்தை முன்னரே நாம் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வளவு குறைந்த செலவில் யாராவது விண்வெளிக்கு செல்ல முடியுமா சொல்லுங்கள். ஆனாலும் இந்த திட்டத்தை பயன்படுத்தி விண்வெளிக்கு சென்று வர பலபேர் ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்