இயக்குனர்களில் ஆண், பெண் வேறுபாடு கிடையாது - நடிகர் சௌந்தரராஜா பேட்டி

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (12:07 IST)
சுந்தரபாண்டியன், தர்மதுரை படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர் சௌந்தரராஜா. சந்திரா இயக்கியிருக்கும் கள்ளன், சுராஜின் கத்திச் சண்டை படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். ஒரு கனவு போல படம் இவரை கதை நாயகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது. அவருடனான பேட்டி...


 
 
ஒரு கனவு போல படத்தைப் பற்றி கூறுங்க...? 
 
ஒரு கனவு போல படத்தில் நடித்தது நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம். ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், பாரதிராஜா சார், பாக்கியராஜ் சார் படங்கள்போல கதாபாத்திரங்களை உளவியல்ரீதியாக சித்தரிக்கும் படங்கள் இப்போது வருவதே இல்லை. ஒரு கனவு போல அப்படி ஒரு படமாக இருக்கும். 
 
இதில் உங்க ரோல் என்ன? 
 
கதாபாத்திரங்களுக்குள் ஏற்படுகிற உளவியல் பிரச்சினைகளை அழகாக சொல்லி இருக்கிறார் ஒரு கனவு போல படத்தின் இயக்குநர் விஜயசங்கர் சார். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கள்ளனா, காதலனா என்பதைப்பற்றி இப்போதைக்கு நான் வெளியே சொல்ல முடியாது. படம் பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள். 
 
கள்ளன் படத்தில் பெண் இயக்குனரின் இயக்கத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது? 
 
இயக்குநர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதை இயக்குனர் சந்திரா அக்காவின் கள்ளன் படம் நிருபிக்கும். கள்ளன் படத்தில், நடித்தது நிஜமாகவே பெருமையான விஷயம். 
 
இந்த இரு படங்கள் மீதும் உங்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளதா? 
 
உண்டு. இந்த இரண்டு படங்களுமே மிகவும் பேசப்படுகிற படங்களாக இருக்கும். இந்த இரண்டு படங்களிலும் என் கதாபாத்திரங்களும் பேசப்படும். 
 
தற்போது என்ன மாதிரியான கதைகள் கேட்கிறீர்கள்? 
 
ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். 
 
அப்படியானால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பீர்களா? 
 
என்னைப் பொறுத்தவரை நான் நடிகன். என்னை நம்பி ஹீரோவாக, வில்லனாக எப்படி நடிக்க அழைத்தாலும் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் உடனடியாக சம்மதிப்பேன்.
அடுத்த கட்டுரையில்