ஆடாமலே தகர்ந்தது பதக்க கனவு.! மருத்துவமனையில் வினேஷ் போகத்.! பிரதமர் மோடி ஆறுதல்..!!

Senthil Velan

புதன், 7 ஆகஸ்ட் 2024 (13:26 IST)
ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். உங்களால் தேசம் பெருமை அடைகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றாலும் வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் பதக்கம் மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  2016- ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதியில் தோல்வி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டில் காலிறுதியில் தோல்வி என ஒலிம்பிக் களம் மட்டும் வசமாகாமலே இருந்தது. இரண்டு ஒலிம்பிக்கில் தோல்வி கண்ட வினேஷ் போகத்திற்கு, பாரிஸ் ஒலிம்பிக்கில், முதல் சுற்றே கடும் சவாலாக இருந்தது.
 
சாம்பியனை வீழ்த்திய வினேஷ் போகத்:
 
தொடக்க சுற்றில் 4 முறை உலக சாம்பியனும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பான் வீராங்கனையை சுசாகியை வீழ்த்தி அசத்தினார்.  காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் இருந்தார். 
 
ஆடாமலே தகுதி நீக்கம்:
 
இன்று இரவு நடைபெறும் மல்யுத்த இறுதி போட்டியில் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் 50 கிலோவையும் தாண்டி எடை கொண்டிருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தியாவின் தங்கப்பதக்கம் கனவு தகர்ந்து போனது.
 
மருத்துவமனையில் வினேஷ் போகத்:
 
இதனிடையே உடல் எடையை குறைக்க நேற்று இரவு முழுவதும் வினேஷ் போகத் தீவிர உடற்பயிற்சி செய்து உள்ளார். இதனால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
பிரதமர் மோடி ஆறுதல்:
 
வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,  வினேஷ் நீங்கள் சாம்பின்களுக்கெல்லாம் சாம்பியன் என்றும் நீங்கள் இந்தியாவின் பெருமிதம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வொரு இந்தியருக்குமான உத்வேக அடையாளம் நீங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இன்றைய பின்னடைவு வலியைத் தருகிறது என்றும் நான் அனுபவிக்கும் விரக்தியை வார்த்தைகளால் விவரிக்க முயற்சிக்கிறேன் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 
அதேவேளையில், நீங்கள் மீண்டெழுதலின் அடையாளம், சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல் எப்போதுமே உங்களது இயல்பாக இருந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். வலிமையுடன் மீண்டு வாருங்கள் என்றும் உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
 
பி.டி உஷாவுடன் பேசிய பிரதமர்:
 
இதனிடையே இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் இனி வினேஷ் போகத்துக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்