இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும். தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தோனி மீது ஹூக்கா சம்மந்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் “2008 ஆம் ஆண்டு நான் அணியில் தொடர்ச்சியாக எடுக்கப்படவில்லை. அதைப் பற்றி நான் தோனியிடம் கேட்டபோது எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்கிறது இர்ஃபான் என்றார். ஆனால் அதன்பிறகு எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. எனக்கு மற்றவர்களின் அறைகளுக்கு சென்று அவர்களுக்கு ஹூக்கா வைத்துக் கொடுக்கும் பழக்கம் இல்லை” எனக் கூறியுள்ளார். இதனால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு “ஹூக்கா” விஷயம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார் இர்ஃபான் பதான்.
இந்நிலையில் பதானின் இந்த கருத்துப் பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் “தோனி பற்றி இர்ஃபான் பதான் மட்டும் அப்படி சொல்லவில்லை. சேவாக், கம்பீர் மற்றும் ஹர்பஜன் போன்றவர்களும் சொல்லியுள்ளனர். ஒரு நடுவரை வைத்து தோனியை நாம் சோதனை செய்ய வேண்டும். தோனி இதைப் பற்றி பேசமாட்டார். அமைதியாக இருப்பது பெரும்பாலும் குற்றவுணர்ச்சியால்தான் என்பது நமக்குத் தெரியும்.” எனக் கூறியுள்ளார்.