பாகிஸ்தான் செல்வதை மறுஆய்வு செய்யவேண்டும் – இலங்கை பிரதமர் அலுவலகம் அறிவுரை !

வியாழன், 12 செப்டம்பர் 2019 (13:58 IST)
இலங்கைக் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை மறு ஆய்வு செய்ய வேண்டுமென இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மேல் தாக்குதல் நடைபெற்றது. இதில் 7 பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகினர். வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அதன் பின் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட எந்த நாடும் முன் வரவில்லை.

இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொண்டு அதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என அறிவித்து 10 இலங்கை வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்கா லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே ஆகிய 10 வீரர்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் விருப்பமுள்ள வீரர்களைக் கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியம் அணியினைத் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு  பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், பயணத்தை மறு ஆய்வு செய்யுமாறு இலங்கை பிரதமர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் இலங்கைக் கிரிக்கெட் வாரியமோ பாகிஸ்தான் தங்களுக்கு அளிக்க இருக்கும் பாதுகாப்பை மறு ஆய்வு செய்து தீவிரப்படுத்த இலங்கை அரசு உதவ வேண்டும் எனக் கோரியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்