17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. தொடர் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் துபாயில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் UAE அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பல விமர்சனங்கள் சர்ச்சைகள் எழுந்தன. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறாதது கண்டனங்களைப் பெற்றது. ஆனாலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி பலமிக்க அணியாகதான் உள்ளது.
மேலும் சஞ்சு சாம்சன் ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரராகக் கலக்கி வரும் நிலையில் ஷுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளதால், சஞ்சுவின் இடத்துக்கு பிரச்சனை எழுந்துள்ளது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேல் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். அதில் “சஞ்சு சாம்சனை நாங்கள் நல்லபடியாகப் பார்த்துக் கொள்கிறோம். சரியான முடிவு எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.