இந்திய மகளிர் அணிக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று ஆரம்பித்த நிலையில், நேற்றைய முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், முதல் ஒருநாள் போட்டி நேற்று சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்கமே சிறப்பாக இருந்தது. ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரித்திகா ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்த நிலையில், அதனை அடுத்து விளையாட வந்த ஜெமீமா மற்றும் தீப்தி ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, தீப்தி ஷர்மா 62 ரன்கள் எடுத்தார் என்பதும், இதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெமீமா 48 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய மகளிர் அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 48 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணிக்கு ஐந்து ரன்கள் மட்டுமே தேவை இருந்த நிலையில், 49 வது ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் இந்திய மகளிர் அணி இரண்டு பவுண்டரிகளை அடித்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 62 ரன்கள் எடுத்த தீப்தி ஷர்மா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.