இலங்கை - இந்தியா அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளிலே 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்தது.
நான்காவது நாளான இன்று இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது. இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் மட்டும் ஒருபக்கம் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். தினேஷ் சந்திமால் 61 ரன்கள் குவிந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.