இங்கிலாந்துக்கு எதிரான பார்படோஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆணி 384 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது. இது வெஸ்ட் இண்டீஸின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆண்ட்டிகுவாவில் தொடங்கியது. இதில் டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்தை பேட் செய்யுமாறு பணித்தது.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக் காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே உடனடியாக நடையைக் கட்டினர். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ மட்டும் தனியாளாகப் போராட அவரைத் தவிர மற்றவர்கள் வந்த வேகத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். பேர்ஸ்டோ 52 ரன்களில் அவுட் ஆனதும் இங்கிலாந்து மீண்டும் தனது நம்பிக்கையை இழந்தது.
இதனால் இங்கிலாந்து அணி 93 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதனை அடுத்து வந்த மொயின் அலி மற்றும் பென் போக்ஸ் இருவரும் போராடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பென் போக்ஸ் 35 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக விளையாடிய மொயின் அலில் அரைசதம் கடந்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் ஆகியோரைத் தவிர மற்ற 7 வீரர்களும் ஒற்றை இலக்க எண்களைத் தாண்டவில்லை. இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
சிறப்பாகப் பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோச் 4 விக்கெட்ளை வீழ்த்தினார். மேலும் கேப்ரியல் 3, ஜோசப் 2 மற்றும் ஹோல்டர் 1 விக்கெட்டை சாய்த்தனர். அதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஹோல்டர், டெஸ்ட், இங்கிலாந்து தடுமாற்றம், England, west indis, holder, test
England struggling continues in second test