ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளது. 2009-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான அஸ்வின், தனது ஐபிஎல் பயணத்தின் இறுதியையும் அதே அணியுடன் நிறைவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அஸ்வின் ஐபிஎல்லில் இருந்து விலகி, வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்த போவதாக அஸ்வின் அறிவித்த நிலையில் அஸ்வின் ஓய்வு குறித்து சிஎஸ்கே தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு நன்றிதெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
"சேப்பாக்கின் சொந்த சிங்கம். கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்! முதன்முதலில் மஞ்சள் நிற ஜெர்ஸியில் சேப்பாக்கம் மைதானத்தில் அறிமுகமாகி, உலக அரங்கில் சுழற்பந்தில் ஆதிக்கம் செலுத்தினாய். நீங்கள் அனைத்தையும் கொடுத்தீர்கள். எங்கள் பாரம்பரியத்தின் தூணாக இருந்து சேப்பாக்கம் கோட்டையில் கர்ஜித்தீர்கள். வாழ்க்கை ஒரு முழுமையான வட்டமாக அமைந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸில் தொடங்கி அங்கேயே முடிகிறது. நீங்கள் எப்போதும் சிங்கம். எப்போதும் எங்களில் ஒருவர்! அழகான நினைவுகளுக்கு நன்றி, என்று சிஎஸ்கே நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளது.