இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான U-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற இலக்குடன் களமிறங்கிய நிலையில், இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ஆயுஷ் மாட்ரே டக் அவுட் ஆனதால் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து, 68 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
14 வயதே ஆன சூர்யவன்ஷி, U-19 ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு, இந்திய இளம் அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த் 38 சிக்ஸர்களுடன் இந்த சாதனையை வைத்திருந்தார். சூர்யவன்ஷி, வெறும் 10 போட்டிகளில் 41 சிக்ஸர்கள் அடித்து இந்த சாதனையை எட்டியுள்ளார்.