சிவாஜி ஃபார் 90’ஸ் கிட்ஸ்: சிவாஜி பிறந்தநாள் பகிர்வு- பகுதி 1

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (11:22 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தொன்னுறாவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த நாளை முன்னிட்டு 90’ஸ் கிட்ஸ்களாகிய இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய இரண்டு முக்கியமான படங்கள் பற்றிய பதிவு.

நடிகர் திலகம், செவாலியே, சிம்மக்குரலோன் எனப் பலப்பல பட்டங்கள் பெற்ற சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய காலமான அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் நடித்த படங்களை தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பும் போது இன்றைய இளைஞர்கள் அமர்ந்து ரசித்து பார்ப்பார்களா என கேட்டால் நாம் யோசித்துப் பார்த்துவிட்டு இல்லை என்றே தலையாட்ட வேண்டும்.

தமிழ் சினிமாவின் ஆரம்பக்காலம் என்பது  மேடை நாடகங்களினால் அதிகமாக ஆதிக்கம் செலுத்தப் பட்டது. படமாக்கப்பட்டவை பெரும்பாலும் புராண நாடகங்களே என்பதும் நடித்தவர்கள், இயக்கியவர்கள் அனைவரும் நாடகப் பின்புலம் கொண்டவர்கள் என்பதால் நாடகங்களில் பின்பற்றப்படும் நடிப்ப்பு முறையே தமிழ் சினிமாவிலும் பிரதிபலித்தது. உதாரணமாக நாடகங்களில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக ’அம்மா சாப்டியா’ சாதாரண வசனங்களைக் கூட ’அம்மாஆஆ சாப்டியாஆஆ’ என உரக்கப் பேசியே நடிப்பார்கள். அது நாடகத்தின் இலக்கணத்துக்குப் பொருந்திப் போனது.

ஆனால் சினிமா என்பது வேறு வகை ஊடகமாயிற்றே. சினிமாவில் காமிராவை நாம் நடிகருக்கு மிக அருகில் வைத்து படம்பிடிக்கும்போது அவரின் லேசான உணர்ச்சி மாற்றத்தின் மூலமே வசனத்தின் உதவியின்றி நாம் சொல்லிவிட முடியும். ஆனால் தமிழ் சினிமா நாடகப்பாணியையே தொடர்ந்து பின்பற்றி வந்தது. யார் உணர்ச்சிப் பெருக்கோடு மிகப் பெரிய வசனங்களைப் பேசுகிறார்களோ அவர்களே சிறந்த் நடிகர். யார் கண்கள் சிவக்க அழுது புலம்புகிறார்களோ அவரே சிறந்த நடிகர். யார் மிகை உணர்ச்சியாக நடித்து தள்ளுகிறாரோ அவரே சிறந்த நடிகர் என்பது எழுதப்படாத விதியானது.

நாடகப் பின்புலத்தில் இருந்து வந்த சிவாஜி கணேசனும் இந்த விதிகளைப் பின்பற்றி அவற்றை சிறப்பாக செயல்படுத்த தமிழ் ரசிகர்களின் மனதில் நடிகர் திலகமாக நீங்காத இடம் பிடித்தார்.

ரசிகர்கள் கொண்டாட கொண்டாட இந்த பாணியை அவர் கெட்டியாக அவர் பிடித்துக் கொண்டார். இதற்கிடையில் சில இயக்குனர்களின் இயக்கத்தில் அவர் சிறப்பாக நடித்த சில படங்கள்(அந்த நாள், திரும்பிப்பார்) பெரிய அளவில் வெற்றி பெறாததும் அவர் இந்த பாணியையே பற்றிக் கொள்ள ஒரு காரணமாக மாறிவிட்டது. ஆனாலும் அதிலும் கூட கதாநாயகன், வில்லன், நடுவயது குடும்பஸ்தன், முரடன், தேசதுரோகி, எனப் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று பல்வகை நடிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே அவரின் மிகையுணர்ச்சிப் படங்கள், தற்போது ஆன்லைனில் கொரியன் சினிமா, இரானியன் சினிமா என பார்த்துக் கொண்டாடி வரும் இன்றைய இளைஞர்களுக்கு அவரின் சினிமாக்கள் பொறுமையை சோதிப்பதாக இருப்பது ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனாலும் இந்த 90ஸ் கிட்ஸ் இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையிலும் அவர் அண்டர்ப்ளே எனும் நடிப்புப் பாணியில் நடித்து அசத்தியிருக்கும் இரண்டு படங்கள் உள்ளன. அவை அவரின் சினிமா வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த முதல் மரியாதை, தேவர் மகன். இந்தப் படங்களைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்