முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் அதிமுக தொண்டர்களுடன் தமிழ் திரையுலகமும் வாடிப் போயுள்ளது. தங்களின் மூத்த கலைஞரை இழந்த சோகத்தின் ரேகைகளை ஒவ்வொரு திரைக்கலைஞரிடமும் பார்க்க முடிகிறது.
ஜெயலலிதாவின் இத்தனை புகழுக்கும், பதவிக்கும் அடிப்படையாக, ஆணிவேராக அமைந்தது அவரது கலைப்பயணம். சிறுவயதிலேயே நாடகங்களில் நடித்தவர், சிறுமியாக கேமரா முன் வாழ்க்கையை தொடங்கியவர். ஆனால், நடிகை என்ற தொழிலை அவர் ஆரம்பத்தில் விரும்பவில்லை. ஜெயலலிதாவின் தாய் சந்தியா படப்பிடிப்புக்காக செல்லும் போது நாள் கணக்கில், வாரக்கணக்கில் ஜெயலலிதா தனது தாயை பிரிந்திருக்க வேண்டியிருந்தது. பள்ளியில் படிக்கிற அந்த சின்ன வயதில் தாயின் பிரிவு அவரை ஆழமாக வருத்தியது. முதல்வர் ஆனபிறகு அவர் அளித்த பேட்டியிலும் அதனை அவர் நினைவுகூர்ந்திருக்கிறார். அம்மா கிளம்பிப் போகும் போது அழுது அடம்பிடிப்பார் என்பதால், ஜெயலலிதாவை தூங்க வைத்த பிறகே அவரது அம்மா கிளம்பிச் செல்வராம். அப்படி தூங்கும் போதும் அம்மாவின் முநற்தைனையை பிடித்தபடியேதான் தூங்குவாராம், அம்மா கிளம்பிப் போய்விடக் கூடாதே...
சினிமாவின் பரபரப்பை, ஆடம்பரத்தை முதலில் வெறுத்தவர், இதுதான் தனது தொழில், தனது வாழ்க்கை என்றான பிறகு நடிப்பையும், தொழிலையும் நேசிக்க ஆரம்பித்தார். எந்தத்துறையில் ஈடுபட்டாலும் அதில் முதலாவதாக, சிறந்தவராக இருக்க வேண்டும் என்ற அவரது இயல்பான முனைப்பு அவரை முன்னணி கலைஞராக்கியது.
ஆங்கிலம், இந்தி, கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்த பிறகே ஜெயலலிதாவின் தமிழ் திரைப்பிரவேசம் நிகழ்ந்தது. 1965 -இல் வெளியான வெண்ணிற ஆடை திரைப்படம் ஜெயலலிதாவின் அறிமுகத்தால் என்றென்றும் மறக்காத அழியா புகழ்பெற்றது. 1965 -இல் அவர் நடித்த சந்திரோதயம் திரைப்படம் தமிழின் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுத் தந்தது. இரட்டை வேடங்களில் அவர் நடித்த யார் நீ? திரைப்படம் அவரது நடிப்புத் திறமைக்கு சான்றாக உள்ளது. பல விருதுகளை இந்தப் படம் அவருக்கு பெற்றுத் தந்தது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஜோடி ஒரு பெரும்காலகட்டத்தை ஆதிக்கம் செலுத்தியது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்தப் படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன. அடிமைப்பெண் அதன் உச்சம் எனலாம்.
ஜெயலலிதா வரும்போது ஒரு தேவதை வருவது போலிருக்கும் என்று கூறியுள்ளார் சரோஜாதேவி. ஆண்களைவிட பெண்கள் அவரது தோற்றப்பொலிவில் அதிகம் வசீகரிக்கப்பட்டனர். அவரது குரல்வளமும் அபாரமானது. அடிமைப்பெண் திரைப்படத்தில் அவர் பாடிய, அம்மா என்றால் அன்பு, சூரியகாந்தி திரைப்படத்துக்காக பாடிய ஓ தில் ரூபா உள்ளிட்ட பாடல்கள் இன்றும் அவரது இனிமையான குரலுக்கு சான்றாக உள்ளன.
தனது நீண்ட கலைவாழ்க்கையில் ஐந்துமுறை சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதையும், எட்டுமுறை தமிழ்நாடு சினிமா ஃபேன்ஸ் விருதையும், 6 முறை சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.
அரசியலைப் போலவே திரையுலகிலும் ஆழமான பங்களிப்பை செலுத்தியவர் ஜெயலலிதா. அவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.