முருகப்பெருமான் தகப்பன் சுவாமி என்று போற்றப்படுவது எதனால்...?

Webdunia
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. 


இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம்  என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.
 
ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில்  கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.
 
அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்