அஷ்ட பைரவர்கள் அவதாரம் எப்போது நிகழ்ந்தது...?

Webdunia
பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப்போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர். எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும், இரவு கோயில் மூடப்படும்போதும் பைரவ பூஜை செய்வார்கள். சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே.
அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல் முப்போதும் சிவ சிந்தனையில்  திளைத்திருக்கும் முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை. தேவர்களையும், எப்போதும் தன்னையே நினைத்திருக்கும் முனிவர்களையும் துன்புறுத்தும்  அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத்  தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக்  கொய்தவரும் பைரவர்தான்.
 
ஒருமுறை தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அழிக்க நினைத்த சிவபெருமான், பிட்சாடன மூர்த்தியாக வடிவம் ஏற்றுச் சென்றார். அவரால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிவர்கள் சிவபெருமானை அழிக்க முயற்சித்தனர். கடும் கோபம் கொண்ட சிவபெருமான் காலாக்னியால்  தாருகாவனத்தை அழித்தார். இதனால் உலகம் முழுக்க இருள் பரவி சூரியனும் மறைந்து போனது. 
 
அப்போது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார். இப்படி எட்டுவிதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள். ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் 64 விதமான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என புராணங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்